சிறுவனின் ஆன்லைன் விளையாட்டால் தாய் வங்கி கணக்கில் பணம் ‘அவுட்’

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் இருக்கும் கார்த்திக், தனது தந்தையின் மொபைல் போனில் ‘ப்ரீ ஃபையர்’ எனும் கேமை ஆன்லைன் மூலம் விளையாடி வந்தார். கேம் அப்டேட் கேட்கும் நேரத்தில், தனது தாயின் ஏடிஎம் கார்டின் யுபிஐ நம்பரை பதிவு செய்துள்ளார்.  இவ்வாறு பலமுறை செய்ததால் அவரது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் வரை பணம் பறிபோனது. இதனிடையே இவரது பெற்றோர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றனர்.

அப்போது கணக்கில் பணம் குறைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது, ஆன்லைன் விளையாட்டிற்கு கட்டணமாக சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மகனிடம் விசாரித்தபோது நடந்தவற்றை கூறி ஒப்புக்கொண்டுள்ளார்.

பணத்தை மீட்க முடியாது என விசாரித்து தெரிந்து கொண்ட பெற்றோர், மகனுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். ஒரு நோட்டில் 1 முதல் 90 ஆயிரம் வரை எழுத வேண்டும் என நூதன தண்டனையை நேற்று வழங்கினர்.  இதனையடுத்து 3 ஆயிரம் வரை எழுதிய சிறுவன் கை வலிப்பதாக கூறினான். அதனை தொடர்ந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது என பெற்றோர் அறிவுறுத்தினர்.

Related Stories: