தமிழகத்தில் கொரோனா அச்சம் நீங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: சென்னை அயனாவரத்தில்   கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்திலும் கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 55 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.. கொரோனா பரவல் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்று பாதித்தவர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று குறித்து மக்களிடம் அச்சம் நீங்கி விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சட்டசபை தேர்தல் என்பது 5  ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பரீட்சை. அதற்காக நாங்கள் தொடர்ந்து படித்துக்  கொண்டே இருக்கிறோம். மக்கள் மனதை, தேவையை படிக்கின்றோம். எனவே படித்த மாணவர்களுக்கு தேர்வு பயம் கிடையாது. தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் நினைப்பார்கள். மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என பார்க்க வேண்டும். பிரதமரின் கிஷான் திட்ட  முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தவறு செய்த அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: