முக கவசம் முக்கியம்

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆரம்ப நாட்களில் இருந்த கட்டுப்பாடுகள் அனைவருக்கும்  ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. கொரோனா எப்படி பரவுகிறது என்ற புரிதல் மருத்துவர்களுக்கும் இல்லாத நிலையில், கண்களை, கன்னத்தை தொட்டால் பரவும். திடப்பொருட்களை தொட்டால் கை கழுவ வேண்டும் என்று அவரவர்களுக்கு தெரிந்ததை சொல்லிவைத்தார்கள்.  கொரோனாவை தடுக்க முக்கியமான ஆயுதம் முக கவசம். போதிய சமூக இடைவெளி கடைபிடித்து முககவசத்தை அணிந்தால் போதும் பிரச்னை என்பதே இல்லை. ஒருவருடன் மற்றொருவர் பேசும் போது முககவசம் அணிந்து பேசுதல் அவசியம். இந்த கட்டுப்பாட்டை உறுதியாக கடைபிடித்தாலே கொரோனா அச்சமின்றி வாழலாம். எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

கொரோனா ஊரடங்கை தளர்த்திய பிறகு போக்குவரத்து அதிகரிக்க தொடங்கிவிட்டது. பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கிவிட்டதால்  மக்கள் நகரத்துக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இந்த கூட்ட நெரிசலில் தான் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முககவசத்தை அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். பஸ்சில் அமர்ந்து எச்சில் துப்புதல், சாலையில் துப்புதல், பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் குறித்து கவலைப்படாமல் பொதுவெளியில் தும்மல் போடுவது என்று மக்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். இது போன்ற நடவடிக்கைகளை மக்கள் சுயகட்டுப்பாடுடன் தவிர்க்க வேண்டும். அருகில் இருப்பவர்கள் இது குறித்துபோதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதை கோபப்படாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முககவசத்தை அகற்றுதல் கூடாது.

 கொரோனா தளர்வால் தற்போது வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் வருவது அதிகரித்துள்ளது. 913 பேர் சென்னைக்கு வந்துள்ளார்கள். இங்கிருந்து 629 பேர் வெளிநாடு சென்றுள்ளார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களின் கையில் முத்திரை குத்தி 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கை அவசியமானதாக உள்ளது.  கொரோனா தொற்றை ஒருவரிடமிருந்து நாம் எத்தனை சதவீதம் வாங்கி கொள்கிறோம் என்பது தான் முக்கியம். முக கவசம் உள்பட வேறு பாதுகாப்பின்றி 50 சதவீதம் வரை தொற்றை வாங்கிகொண்டு, நமது உடலில் டயாபடிஸ், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் கொரோனாவுக்கு கொண்டாட்டமாகிவிடும்.

இதனால் உடலில் இதர பிரச்னைகள் இருப்பவர்கள் அடுத்தவர்களுடன் பேசும் போதும் வெளியே செல்லும் போதும் முககவசம் அணிவது முக்கியம். இல்லாவிட்டால் கொரோனா அழையா விருந்தாளியாகிவிடும். கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நெகடிவ் வந்து விட்டது என்று அலட்சியமாகவும் இருந்துவிட வேண்டாம். சாதாரண இருமல், ஜூரம் என்றும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம். எந்த வடிவத்திலும் கொரோனா நுழையும் என்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.

Related Stories:

>