சென்ட்ரல்-திருப்பதி, எர்ணாகுளம்-கொச்சிவேலி இடையே 2 தனியார் ரயில்கள் விரைவில் இயக்கம்: தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு

சென்னை: சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், எர்ணாகுளம்- கொச்சிவேலி இடையே வாரத்தில் மூன்று நாட்களும் தெற்கு ரயில்வே சார்பில் 2 தனியார் ரயில்கள் விரைவில் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே அமைச்சக அறிக்கையின்படி, 109 ரயில்வே வழித்தடங்களில் 151 நவீன பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 109 வழித்தடங்களும் 10-12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மும்பை - டெல்லி, சென்னை - டெல்லி, டெல்லி - ஹவுரா, ஷாலிமார் -புனே, டெல்லி -பாட்னா வரை தனியார் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்திலும் தெற்கு ரயில்வே சார்பில் 13 ரயில்கள் தனியார்மயமாக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில்கள் அனைத்தும் 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வந்தனர். தற்போது, முதற்கட்டமாக, இரண்டு ரயில்கள் இயக்குவதற்கு திடீரென நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமை இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வழியாக ரேணிகுண்டாவுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதிக்கு 10.30 மணிக்கு சென்றடையும். அதேபோன்று, மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை திருப்பதியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தடையும். பின்னர் 10.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 12.50 மணிக்கு வந்தடையும். இதற்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், எர்ணாகுளம் முதல் கொச்சிவேலி இடையே வாரத்திற்கு மூன்று நாள் இரண்டாவது தனியார் ரயில் இயக்க திட்டமிடுள்ளனர். அந்த சிறப்பு ரயில் கொல்லம், கோட்டயம் வழியாக கொச்சிவேலி சென்றடையும். இந்த தனியார் ரயிலுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. திடீரென இரண்டு தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்ட்ரல் மற்றும் எர்ணாகுளம், கொச்சிவேலியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

Related Stories:

>