மாணவ, மாணவிகளின் சதவீதம் 49 ஆக உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர் எடப்பாடி பெருமிதம்

சென்னை: உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் சதவீதம் 49 ஆக உயர்ந்து,  இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 29வது இணையவழி பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியதாவது: மாணவர்களின் உயர்கல்வி தேவையை உணர்ந்து, எம்.ஜி.ஆர். சுயநிதி கல்லூரிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அனுமதியளித்து, உயர்கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அந்த புரட்சியில் உதித்த ஒன்றுதான் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

கல்வி சேவையில், இந்த நிறுவனம் இடையறாது ஆற்றி வரும் பணிகளுக்காக,  அரசு துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும், சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து துணைக்கோள் ஒன்றினை விண்ணில் செலுத்திய செயல், இந்த பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. அனைவருக்கும்  உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 2011-12ம் ஆண்டில் இருந்து 2019-20ம் ஆண்டு வரையில், 30 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 2011-12ம் ஆண்டு முதல் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் உயர்கல்வி கற்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.   தமிழகத்தில் அமைதியான சூழ்நிலை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளம் அதிகமாக உள்ளதால், இன்று பல்வேறு  நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அதிக அளவில் முன்னுக்கு வருகின்றன. மேலும், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்புகளின் மூலம் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியினை தொடங்கியுள்ளன.  தமிழகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். உயர்ந்த சிந்தனைகள், உன்னத லட்சியங்கள், பரந்த மனப்பான்மை கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்களிடம் ஒரு ஐன்ஸ்டீன் இருக்கிறார், ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் இருக்கிறார், ஒரு நியூட்டன் இருக்கிறார், ஒரு சர். சி.வி. ராமன் இருக்கிறார், ஒரு சுந்தர் பிச்சை இருக்கிறார், ஒரு முதலமைச்சர் இருக்கிறார், ஒரு பிரதமர் இருக்கிறார்.

இன்னும் வருங்காலத்தில் உலகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்க இருக்கும் மேதைகளும், நாட்டை வழிநடத்தும் தலைவர்களும் பலர் இங்கே இருக்கின்றீர்கள். பட்டம் பெற்று, புதிய உலகத்தில் அடியெடுத்தும் நீங்கள் உணர்ந்து  செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் மரிய ஜான்சன், துணைவேந்தர் சசிபிரபா, இணை துணைவேந்தர் ஏ.லோகசண்முகம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் அருண்குமார் பாதுரி, பதிவாளர் ராவ் மற்றும் பேராசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories:

>