அனுமதியின்றி நடப்பட்ட பாஜ கொடிகம்பம் அகற்றம்: கட்சியினர் மறியல்

சென்னை: பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று முன்தினம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அங்கு புதிதாக நடப்பட்ட 70 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த கொடி கம்பம் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி இல்லாமலும் வைக்கப்பட்டிருப்பதாக கூறி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு பொக்லைன் இயந்திரம் மூலம் கல்வெட்டு மற்றும் கொடி கம்பத்தை அகற்றினர். இதுபற்றி அறிந்த பாஜவினர் நேற்று சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மாலை பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட பாஜவினர் அங்கு குவிந்தனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்மாறு கூறினர்.

ஆனால், மீண்டும் அதே இடத்தில் அந்த கொடிக்கம்பத்தை வைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர். அப்போது, பாஜவினருக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் ஜவகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, பாஜ தொண்டர்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்து பாஜவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் வேறு ஒரு சிறிய கொடிக்கம்பம் நடப்பட்டு பாஜ கொடி ஏற்றப்பட்டது. அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: