மோடி பிறந்த நாள் விழாவில் காஸ் நிரப்பிய பலூன்கள் வெடித்து 10 பேர் காயம்

அம்பத்தூர் : அம்பத்தூர் அடுத்த பாடியில் பாஜ சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் நிகழ்ச்சியில் காஸ் நிரப்பிய பலூன்கள் வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.   

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜ சார்பில் அம்பத்தூர் அடுத்த பாடி சிவன் கோயில் எதிரில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்கிடையில், அவர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு  நிர்வாகி பிரபாகரன் தலைமை வகித்தார். விவசாய அணியின் மாநில துணை தலைவர் முத்துராமன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட காஸ் நிரப்பிய பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. இதனை 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பிடித்தபடி கூட்டத்தின் மேடை அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வந்த முத்துராமனை வரவேற்று கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.

திடீரென பட்டாசின் தீப்பொறி தொண்டர்கள் கையில் வைத்திருந்த பலூன்கள் மீது விழுந்ததில் அனைத்து பலூன்களும் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தீ பிளம்புகள் வானத்தில் சிதறியது. இதில் 10க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முத்துராமனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு கூட்டம் பாதியில் முடிந்தது. பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பாஜவினர் அனுமதி வாங்கவில்லை என கொரட்டூர் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>