கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் விவகாரம் : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கால்நடைகளுக்கு செயற்கையான முறையில் கருவூட்டல் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் 687 மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களில் தேசிய பயிலரங்கள் நடத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது.  இதன்படி,அனைத்து வேளாண் அறிவியல் மையங்களிலும் தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் உற்பத்தி போன்றவைகள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. இதுகுறித்த பயிலரங்குகள் மற்றும் தேசிய செயற்கை முறை கருவூட்டல் ஆகிய திட்டங்களைக் கூட பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுராவில் தொடங்கி வைத்தார்.

இதில் காலநடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது என்பது தமிழகத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் உயர்ரக கால்நடைகள் மற்றும் அதிக பால் உற்பத்திக்கு ஏற்ற காளைகளிடம் இருந்து பெறப்பட்டு உறை வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்படும் அதன் உயிர் அணுக்களானது செயற்கை முறையில் பசுமாடு, ஆடு உட்பட கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட திட்டத்திற்கு எதிராக டாக்டர் வெங்கடேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்திருந்தார். அதில்,கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது என்பது இயற்கைக்கு மாறானது. இதனை நடைமுறைப் படுத்தப்படும் போது அவைகள் துன்புறுத்தப்படுகின்றன. இது சடத்திற்கு எதிரானது என்பதால், இதுபோன்ற திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உத்தரவில், கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.  

Related Stories:

>