மின் மோட்டாரை பழுது நீக்கியபோது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி: ஊத்துக்கோட்டை அருகே சோகம்

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை அருகே மின் மோட்டாரை பழுது நீக்கியபோது, மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தனர். ஊத்துக்கோட்டை  அருகே செஞ்சியகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரோஸ் செட்டியார் (72)  விவசாயி. இவரது பேரன் விக்னேஷ் (21).  இவர் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் தனியார் கல்லூரியில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார்.  ரோஸ் செட்டியாருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.  இதில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடிய பம்ப் செட் மின் மோட்டார் பழுதடைந்து இருந்தது. இதை சீரமைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ரோஸ் மற்றும் அவரது பேரன் விக்னேஷ்  இருவரும் வயலுக்கு சென்றனர்.  

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை மோட்டார் பம்ப் செட்டில் மின்சார பழுதை நீக்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விக்னேஷ்  மீது மின்சாரம் பாய்ந்து அருகில் இருந்த தரைக்கிணற்றில் விழுந்தார். இதையறிந்த, அவரது தாத்தா, பேரன் விக்னேஷை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அப்போது, அவரது காலில் மின்சார வயர் பட்டு அவரும் உயிரிழந்துள்ளார். இதில் தாத்தா, பேரன் ஆகிய 2 பேரும் கிணற்றில் இறந்த நிலையில் மிதந்து கிடந்தனர்.  இந்நிலையில், விக்னேஷின் தந்தை ஏகாம்பரம் தாத்தா, பேரன் ஆகிய இருவரும் வயலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வரவில்லையே என இரவு 9 மணிக்கு வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.  அப்போது,  2 பேரும் கிணற்றில் இறந்த நிலையில் மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சத்தியவாணி, சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாத்தா, பேரன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மின்சாரம் பாய்ந்து தாத்தா,  பேரன் இறந்தது செஞ்சியகரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories: