அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க சாத்தியமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க சாத்தியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில்  ஆன்லைன் வகுப்புகள் கோர்ட் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் கூறியதையடுத்து வருகின்ற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் என்றைக்கும் இருமொழிக்கொள்கைதான் தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். கூடுதல் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது.  இது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்குவது என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மனநிலை மற்றும் கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: