நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் :சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை : நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வினோத்குமார் என்பவர் நோட்டீஸ் ஒட்டினார். பின்னர் உயர் அதிகாரிகள் அந்த நோட்டீசை அகற்றும்படி அறிவுறுத்தியதை அடுத்து, அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது.

இதன் காரணமாக வினோத்குமாரை பணி நீக்கம் செய்துள்ளதாக சுகாதார ஆய்வாளர் முத்துரத்தினவேல் தெரிவித்துள்ளார்.ஆனால் மண்டல அலுவலரும், இணை ஆணையரும் விசாரணை நடத்தி, தன்னை பணியில் சேரும்படி கூறிய போதும், தன்னை பணியில் சேரவும், வருகை பதிவில் கையெழுத்திடவும் சுகாதார ஆய்வாளர் அனுமதி மறுப்பதாக கூறி, வினோத்குமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி மண்டல நல அலுவலர் சரஸ்வதி, சுகாதார ஆய்வாளர் முத்துரத்னவேல், சுகாதார அலுவலர் லட்சுமணன் ஆகியோரின் உத்தரவின் அடிப்படையிலேயே செயல்பட்டதாக புகாரில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயசந்திரன், இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 23 ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.ஆனால் இதுவரை தனக்கு பணி வழங்கவில்லை என்றும்,  மாநகராட்சி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் வினோத் குமார் மீண்டும் மனித உரிமை ஆணையத்திற்கு மனு அளித்தார்.இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், மண்டல அதிகாரி ரவிகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துரத்தினவேல், சுகாதார அதிகாரி லட்சுமணன், உதவி சுகாதார அதிகாரி சரஸ்வதி ஆகியோர் வரும் செப்டம்பர் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Related Stories: