திருவொற்றியூரில் அமைக்கப்படும் புதிய மீன்பிடி துறைமுக பணிகளை தொடரலாம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்த கருத்து கேட்கும் கூட்டம் கடந்த ஆண்டு நடந்தது. இந்த துறைமுகம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதிகோரி மீன்வளத்துறையானது தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்திருந்தது. திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கே.ஆர் செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதால் துறைமுக கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை பரிசீலித்த தீர்ப்பாயம் அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரை நிபுணர் குழுவில் இணைக்கவும் துறைமுக கட்டுமான பணிகளை தொடரவும் அனுமதி வழங்கி விசாரணை அக். 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Stories: