திண்டுக்கல் அருகே 400 ஆண்டு பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு

மதுரை: திண்டுக்கல் அருகே 400 ஆண்டு கால பழமையான சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் லட்சுமண மூர்த்தி. இவரது தலைமையில் பேராசியர் கருப்பசாமி, பேராசிரியை கஸ்தூரி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி ஊராட்சிப் பகுதியில் செவணக்கரையான்பட்டி என்ற இடத்தில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால சதிக்கல் கண்டறியப்பட்டது.

இது குறித்து பேராசிரியர் லட்சுமணமூர்த்தி கூறுகையில், ‘‘கணவர் இறந்ததும் அவரது மனைவியும் உடன்கட்டை ஏறும் பழக்கம் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இருந்ததற்கான சான்றாக அமைகிறது. இரண்டரை அடி உயரமும் 3 அடி அகலத்திலும் சதிக் கல்லில் ஒரு ஆணும், இரு பெண்களும் நின்ற  நிலையில் சிற்பம் உள்ளது. சிற்பத்தின் மேல் பகுதி கல்வெட்டு தேய்ந்த நிலையில் காணப்படுவதால் அதன் பொருளை அறிய முடியவில்லை. ஆணின் வலதுபுறம் உள்ள பெண் சிற்பம் வலது கையை உயர்த்தி காட்டுவதால் சதிக்கல் என்று அறியலாம்.

சிற்பத்தின் மூன்று பேரும் தலையின் கொண்டைப்பகுதி சற்று சரிந்தும், கழுத்தில் ஆபரணங்களுடனும், நீண்ட காதுகளுடனும், கை மற்றும் கால் பகுதியில் வளையல் கொண்டு அழகுபடுத்தி செதுக்கப்பட்டுள்ளது. ஆணும், இடதுபுறம் உள்ள பெண்ணும் இரு கை கூப்பி வணங்குகின்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் சிற்பம் காணப்படுவதால் சற்று தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. சதிக்கல்லை தற்போது ஊர் மக்கள், மாலையம்மன் கோயில் என்று வழிபட்டு வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: