டெல்லி கலவர வழக்கில் சீதாராம் யெச்சூரி பெயர் சேர்ப்புக்கு எதிர்ப்பு: மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க். கம்யூ., கட்சி போராட்டம்!!!

சென்னை:  குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக்கோரி, தமிழநாட்டின் பல இடங்களில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கும், சி.ஏ.ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே வடக்கு டெல்லி பகுதியில் மோதல் ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி 24ம் தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. அந்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார் 108 பேர் காயமடைந்தனர்.

 இரண்டு போலீஸார் உயிரிழந்தனர். அந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீஸ், அது தொடர்பாக 751 எஃப்.ஐ.ஆர்-களைப் பதிவுசெய்திருக்கிறது. 1,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், ஆவணப்பட இயக்குனர் ராகுல் ராய் ஆகியோரின் பெயர்கள் திடீரென்று கடந்த வாரம் சேர்க்கப்பட்டன.

 இது குறித்த செய்தி அரசியல் வட்டாரத்தை அதிரவைத்தது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. இந்த நிலையில், தற்போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதாவது சென்னையில் பெயர் சேர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து பல்வேறு முழங்கங்களை எழுப்பினர். இதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் ஏராளமான மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து, நெல்லை மற்றும் தேனி மாவட்டம் போடியில் போராட்டம் செய்த மார்சிஸ்ட் கட்சியினர் யெச்சூரி மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் பழிவாங்கும் நோக்கத்துடனே மத்திய அரசு வழக்குகளை பதிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: