வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல் உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. வரும் 18, 19 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: