அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேர்வு நடத்த செலவு எவ்வளவு? மனுதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்வு நடத்த பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவு செலவானது என்று பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தேர்வு கட்டணம் செலுத்தவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலும், செலுத்தாவிட்டாலும், அனைத்து மாணவர்களின் தேர்வு முடிகளை வெளியிட வேண்டும். தேர்விற்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டது.

தேர்வு கட்டணமாக மாணவர்களிடம் இருந்து ரூ.118 கோடி வசூலிக்கபட்டு, அதில் ரூ.141 கோடி தேர்வு நடத்த செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மறுமதிப்பீடு, மதிப்பெண் சான்று வழங்கும் பணிகள் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே வசூலித்த கட்டணத்திலேயே பற்றாக்குறை உள்ளது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த பதில் மனுவிற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தேர்வு நடத்த எவ்வளவு செலவானது என்று பல்கலைக்கழகம் தெளிவுப்படுத்தி புதிய மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: