நோயாளிகளிடம் பணம் வசூலித்த புகார் கொரோனா சிகிச்சை பணியில் இருந்து சித்த மருத்துவர் வீரபாபு நீக்கம்

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியாக கொரோனா நோயாளிகளிடம் பணம் வசூலித்தது தொடர்பான புகாரில் சித்த மருத்துவர் வீரபாபு கொரோனா சிகிச்சை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று சென்னையில் அதிகரித்து கொண்டு இருந்த நேரத்தில் சென்னை சாலிகிராமம் ஜவகர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார் சித்த மருத்துவர் வீரபாபு. இந்நிலையில் இந்த மையத்திற்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவர் வீரபாபு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தன்னிச்சையாக செயல்பட்ட வீரபாபு உள் நோயாளிகளாக அனுமதிப்பது, குணம் அடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்ததாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அரசின் இலவச  சித்தா  சிகிச்சை மையத்தில் சிறப்பு அறை ஏற்படுத்தி அங்கு தங்கி சிகிச்சை பெற்றவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூல் செய்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் சிகிச்சை அளிப்பாக கூறி, சாப்பாடு மட்டுமே வழங்கி வந்துள்ளார். அதோடு கபசுர குடிநீர் மட்டுமே கொடுத்து, இதுதான் சிகிச்சை என்ற கூறி வந்துள்ளார்.

தனியார் ஸ்கேனிங் மையங்களுடன் தொடர்பு கொண்டு நோயாளிகளை அங்கு அனுப்பி அதிக கட்டணம் கொடுக்க வைத்துள்ளார். ஸ்கேனிங் மையத்தில் இருந்து நேரடியாகவே வீரபாபு செல்போனுக்கு ரிப்போர்ட் வழங்கி வந்தன. அதிலும் பெரிய அளவில் பணம் சம்பாதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், நோயாளிகளுக்கு தினமும் கொடுக்கப்பட்ட மருந்துகள், உணவுகள் குறித்த எந்த கணக்கும் அவரிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான செய்தி கடந்த செப்.13ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் வீரபாபு முறைகேடாக பணம் வசூலித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐவகர் கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்து நேற்று வீரபாபு நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜவகர் கல்லூரி மையத்தை நிர்வகிக்கும் பணியை வேறு மருத்துவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் 200நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஒருசில தினங்களில் குணமடைந்து வீடு திரும்ப உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மையம் மூடப்படும் என்று கூறப்படுகிறது.

* வீரபாபுவிடம் விசாரணை

நோயாளிகளிடம் பணம் வசூலித்த புகார் தொடர்பாக நேற்று சித்த மருத்துவர் வீரபாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மாலை 4 மணிக்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வியாசர்பாடியில் 750 நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் சசிக்குமார், பிச்சைக்குமார், சாய் சதீஷ் ஆகியோர் தலைமையில் 9 டாக்டர்கள், 4 செவிலியர்கள், 2 மருந்தாளுநர்கள், 4 ஒருங்கிணைப்பாளர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல, மாநிலம் முழுவதும் 32 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: