முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி ஆன்லைன் வகுப்பு புரியாமல் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. ஆட்டோ டிரைவர். மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் சுபிக்‌ஷா(15), மகன் சுமன் (12). சுபிக்‌ஷா மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளார். மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழாவை ஒட்டி, மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சுபிக்‌ஷா பரிசு பெற்றுள்ளார்.

கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுபிக்‌ஷாவுக்கு பாடங்கள் சரிவர புரியாமல் இருந்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற மன கவலையில் இருந்த சுபிக்‌ஷா, நேற்று முன்தினம் இரவு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி உறவினர்கள் கூறுகையில், ‘‘ஆன்லைன் வகுப்பு புரியாமல்தான் சுபிக்‌ஷா தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களை பாதிக்கும் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: