வருசநாடு அருகே சாலை வசதியில்லாததால் அன்றாடம் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் மலைக்கிராமமக்கள்

வருசநாடு: வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ தூரம் நடந்தே செல்லும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட முதுத்தூத்து, தேக்கிளைகுடிசை, திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு விளையும் பயிர்கள் ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஒவ்வொரு நாளும் பயிர்களை மாட்டுவண்டி, டூவீலர்களிலும் மற்றும் தலைச்சுமையாக விவசாயிகள் கொண்டு செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கூலி ஆட்களின் செலவு அதிகமாகிறது. மேலும் தார்ச்சாலை வசதியில்லாததால் வருசநாடு, கீழபூசணியூத்து, சிங்கராஜபுரம் போன்ற கிராமங்களுக்கு தினமும் சுமார் 5 கி.மீ தூரம் மக்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது.

இதுகுறித்து பாலு கூறுகையில், எங்கள் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி நீண்ட காலமாக இல்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வருசநாட்டிற்கு செல்ல மிகவும் கஷ்டப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலையில்தான் இன்றளவும் உள்ளோம். எனவே, தேனி மாவட்ட கலெக்டர், எங்கள் கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

Related Stories: