குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குடற்புழு நீக்க மாத்திரைகளை அளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குடற்புழு நீக்க மாத்திரைகளை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் மகளிர் மருத்துவமனையில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாத்திரையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பேட்டி: குடற் புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தடுப்பதற்காக குடற்புழு நீக்க மாத்திரை முகாம்கள் நடத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும் நினைவாற்றல் அறிவுத் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. அனைத்து பெற்றோர்களும் இந்த மாத்திரையை தங்களின் குழுந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.1 முதல் 19 வயது உள்ள அனைவரும் குடற்புழு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர்  குருநாதன், பொது மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் சேகர், சிறப்பு அலுவலர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: