திண்டுக்கல் அருகே நாட்டுத்துப்பாக்கி விற்ற 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்றது தொடர்பாக லேத் பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம், எஸ்ஐ அழகுபாண்டி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு சிறுமலை அடிவாரத்தில் உள்ள மலைமாதா கோயில் பகுதியில்  ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், இரண்டல்பாறையைச் சேர்ந்த யோவான் (41) எனவும், நாட்டுத்துப்பாக்கியை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். இதில், திண்டுக்கல் அருகே, ரெட்டியபட்டியில் யோவான் லேத் பட்டறை நடத்தி வந்துள்ளார். தனது சகோதரர் ஆரோன் (45), தவசிமடையைச் சேர்ந்த கிருஷ்ணன் (52), நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த பரதன் (48) ஆகியோருடன் சேர்ந்து அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்து விற்றது தெரிய வந்தது. நான்கு பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க பயன்படும் இரண்டு பேரல்களை பறிமுதல் செய்தனர். இதில் பரதன் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: