பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது: முதல்நாளான இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்.!!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா அச்சுறுத்தல், சீனாவுடன் எல்லையில் மோதல், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி போன்ற பிரச்னைகள் இருக்கும், பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் சபாநாயகர் ஓம் பிர்லா  தலைமையில் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ம் தேதி வரையில் தொடர்ந்து 18 நாட்களுக்கு விடுமுறை எதுவுமின்றி, இத்தொடர் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை முதல்  அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் எம்.பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். முதல்நாளான இன்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி,  மத்தியப்பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன், உ.பி., அமைச்சர்கள் கமல்ராணி, சேத்தன் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மற்றும் மறைந்த கன்னியாகுமரி எம்.பி. வசந்த குமார் உள்ளிட்ட எம்.பி.,க்கள் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அவை தொடங்கியபோது, சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதேபோல், நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக்கூறி திமுக  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த கூட்டத்தொடரில், 23 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் 10 மசோதாக்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசர சட்டங்களை சட்டமாக மாற்றுவதற்கானவை ஆகும். இருப்பினும், கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கை, சீனாவுடன் ஏற்பட்டுள்ள எல்லை மோதல், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி, வேலை வாய்ப்புகள் இழப்பு, ஜிஎஸ்டி,யில் மாநில பங்குகளை வழங்காதது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. இதனைபோல், மாநிலங்களவை கூட்டம் முதல் நாளான இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்  நடைபெறுகிறது.

டி.ஆர்.பாலு பேச்சு:

நீட் தேர்வு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை மாணவர்கள்  பலர் தற்கொலை  செய்துகொண்டுள்ளனர். மேலும் நீட் தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் 12 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர் என்றார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பேசுகையில், உலகளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் மிதமான அறிகுறி  கொண்டவர்கள் என்றார்.

சோனியா, ராகுல் ஆப்சென்ட்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். எனவே, இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்  அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இம்மாத இறுதியில் நாடு திரும்ப உள்ள இவர்கள், கடைசி ஓரிரு நாள் நடக்கும் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிகிறது.

Related Stories: