பாதாள சாக்கடை பணி முடியாமல் சாலை அமைக்க எதிர்ப்பு அதிகாரிகள், வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடிப்பு: தாம்பரம் நகராட்சியில் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1300க்கும் மேற்பட்ட உட்புற சாலைகளும், 50க்கும் மேற்பட்ட பிரதான சாலைகளும் உள்ளன. தற்போது, தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட காளமேகம் தெரு, வால்மீகி தெரு உட்பட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் சிறப்பு நிதி ரூ.2 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் நகராட்சி சார்பில் புதிய சாலை அமைப்பதால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அதையும் மீறி பணி நடைபெற்றதால் அதிகாரிகள் மற்றும் சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட வாகனங்களை நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதிய சாலை அமைக்கப்பட்டாலும் சில நாட்களில் பாதாள சாக்கடை பணிக்காக வீடுகளுக்கு இணைப்புகள் வழங்க மீண்டும் தோண்டப்படும், பின்னர் அதற்கென புதிதாக ஒரு டெண்டர் விடப்பட்டு மீண்டும் சாலை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்கும். எனவே, முழுமையாக பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த பின்னர் சாலையை அமைக்கலாம்.

மேலும், ஏற்கனவே உள்ள சாலை மீது அப்படியே புதிய சாலை அமைப்பதால், உயரம் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே சாலை மட்டத்தில் இருந்து சுமார் 3 அடிக்கும் கீழ் வீடுகள்  உள்ளதால், மழைக்காலங்களில் வீட்டினுள்ளே தண்ணீர் புகுந்துவிடுகிறது. எனவே, தற்போது உள்ள சாலையை தோண்டி எடுத்துவிட்டு, பின்னர் சாலை  அமைக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி உதவி பொறியாளரிடம் தெரிவித்தால் அவர் பொதுமக்களை ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டு வருகிறார். நகராட்சி பொறியாளரிடம் தெரிவித்தால் அவர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதில் அளிக்கிறார். நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவிக்க சென்றால் அவர் பொதுமக்களை சந்திக்கவே மறுக்கிறார்,’’ என்றனர்.

* அனுமதி உள்ளது

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சிறப்பு நிதியின் கீழ் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. எனவேதான் சாலைகள் அமைத்து வருகிறோம். சாலை அமைக்கும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், அங்கு சாலை அமைக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நாங்கள் எங்கள் வேலைகளை செய்து வருகிறோம்,’’ என்றனர்.

Related Stories: