நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்: திமுக பொருளாளர் டெல்லியில் பேட்டி

புதுடெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறினார். டெல்லியில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தரப்பில் நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு கலந்து கொண்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,” நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நாளை(இன்று) காலை எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டிப்பாக போராட்டம் நடத்தப்படும். இதேப்போன்று சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை 2020 , தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்டவை குறித்து மிக முக்கியமாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம்.

நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்கள் எதிர்கால மாணவர்களின் நலனுக்காக தங்களின் உயிரையே தியாகம் செய்து உள்ளார்கள். இதுகுறித்து நாடாளுமன்றம் துவங்கிய உடனே நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக திமுக தரப்பில் குரல் எழுப்பப்படும். சீனாவின் மிரட்டல், ஆக்கிரமிப்பு தன்மையால் தமிழகத்திற்கும் பாதிப்பு உள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “சேது சமுத்திர திட்டம்” தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

சென்னை - சேலம் 8வழி சாலை திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். நாட்டில் வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம்  இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும் என்ற எங்களது தரப்பு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். மேலும் தற்போது மழைக்கால கூட்டம் நடைபெறவுள்ள இந்த 18 நாட்களில் மொத்தமாக 24 விவகாரங்கள் குறித்து பேசவுள்ளோம், இதில் நீட் ரத்து உள்ளிட்ட 12 மிக முக்கியமானதைப் பற்றி தொடர்ந்து வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: