51 திருநங்கைகளுக்கு அரசு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்ய வேண்டும்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த செய்யூர் வட்டம் புத்திரன்கோட்டை கிராமத்தில், 51 திருநங்கைகளுக்கு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசிடம், கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. மதுராந்தகம் அடுத்த செய்யூர் வட்டம் புத்திரன்கோட்டை கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தரை வாடகை கொடுத்து வீடு கட்டி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களை, எந்த நேரத்திலும் அறநிலையத் துறை அதிகாரிகள், வெளியேற்றும் ஆபத்தான நிலை உள்ளது.

இதனால், கடந்த 2017ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் கலெக்டரிடம், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி 3 முறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு இடம் ஒதுக்கி தரவில்லை. அதே நேரத்தில், இந்த கிராமத்துக்கு சம்பந்தமில்லாத 51 திருநங்கைகளுக்கு, கடந்த 2018ம் ஆண்டு, இதே கிராம்த்தில் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் இலவச பட்டா வழங்கி இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வரும் எங்களது கிராமத்தில் திருநங்கைகள் குடியேறினால், இளைஞர்களால் நாளுக்குநாள் பல்வேறு பிரசினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களை, எங்களால் ஏற்று கொள்ள முடியாது. எனவே, 51 திருநங்கைகளுக்கு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: