மாணவிக்கு நோய் தொற்று உள்ளதாக கூறி அரை மணி நேரம் மட்டுமே தேர்வு எழுத அனுமதி; அதிகாரிகள் மீது புகார்

சென்னை: வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்த பாஸ்கர் மகள் நிவேதிதா (18). இவர், நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத சென்றார். அங்கு, இவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தபோது, வெப்பநிலை அதிகமாக உள்ளதாக கூறி தனியாக ஒரு அறையில் அமர வைத்துள்ளனர். தேர்வு தொடங்கிய பிறகு இவரிடம் எழுதுபொருள், கையுறை, முக கவசம் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே கொடுத்துள்ளனர். வினாத்தாள் வழங்கவில்லை. இதுபற்றி மாணவி கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மாணவிக்கு வினாத்தாள் வழங்கி உள்ளனர்.

அரை மணி நேரத்தில் தேர்வு முடியும் தருவாயில் வினாத்தாள் தரப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவி, வேறு வழியில்லாமல் அரை மணி நேரத்திற்குள் எவ்வளவு கேள்விகளுக்கு பதில் தர முடியுமோ அதை மட்டும் எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் உள்ளே சென்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை. இதனால், மாணவி சார்பில், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: