டெல்டாவில் 41 மையங்களில் நீட் தேர்வு: பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி

*  நடு ராத்திரியில் பைக்கில் வந்த அவலம்

*  மழையால் ஒதுங்க இடமின்றி தவிப்பு

திருச்சி: டெல்டாவில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக இன்று அதிகாலையிலேயே மையங்களில் மாணவ, மாணவிகள் குவிந்தனர். பல இடங்களில் வெகு தூரத்தில் தேர்வு மையங்கள் வைத்தால் பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கி 5 மணி வரை நடக்கிறது. டெல்டா மாவட்ட மாணவர்களுக்காக 3 மாவட்டங்களில் மட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி, பெரம்பலுர், அரியலூர், புதுக்கோட்டை மாணவர்களுக்காக திருச்சி மாவட்டத்தில் 22, நாகை, தஞ்ைச, திருவாரூர் மாவட்ட மாணவர்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் 16 மற்றும் கரூரில் 3 என மொத்தம் 41 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் 9498 பேர், கரூரில் 2103 பேர், தஞ்சையில் 7133 பேர் என மொத்தம் 18,734 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடந்தன. அனைத்து தேர்வு அறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் போடப்பட்டன. அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல வசதியாக பாத சுவடுகள் வரையப்பட்டன. 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வர்கள், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வெளி மாவட்ட மாணவர்கள் அதிகாலையில் இருந்தே மையங்களுக்கு வர தொடங்கினர். ஒவ்வொரு மையத்திலும் 2 ஆண் போலீசார், 2 பெண் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். சரியாக 11.40 மணியளவில் மாணவ, மாணவிகள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அரசால் அறிவிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காட்டி உள்ளே சென்றனர்.

கொலுசு, தோடு ஆகியவற்றை மாணவிகளும், மாணவர்கள் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனர். அதேபோல் செல்போன்களும் அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் ரிப்பன் கட்டி இருந்தால் கூட அதை அவிழ்த்து விட்டனர். முக கவசம், கையுறை, சானிடைசர், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் எடுத்துச்சென்றனர். மையங்களுக்குள் சென்றதும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பிறகே தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணிக்கு பிறகு வந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருச்சி, கரூர், தஞ்சை பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாளே வந்த மாணவர்கள்:  நாகை, திருவாரூர் மாவட்ட மாணவர்களுக்கு தஞ்சையில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யத்தில் இருந்து தஞ்சைக்கு பஸ்சில் வர குறைந்தது 4.30 மணி நேரமாகும்.

மேலும் இரவில் பஸ் இல்லை என்பதால், பெரும்பாலான மாணவர்கள் நேற்று இரவே டூவீலர், கார் மற்றும் பஸ்களில் கிளம்பி தஞ்சைக்கு வந்து விட்டனர். ஓட்டல் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கினர். 70 கிமீ டூவீலரில் வந்த மாணவி: பேராவூரணியை சேர்ந்த மாணவி கவி. இவர் 70 கிமீ சகோதரனுடன் டூவீலரில் பயணித்து தஞ்ைச கரந்தட்டாங்குடி மையத்துக்கு இன்று காலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். நள்ளிரவு 2 மணிக்கு கிளம்பி வந்துள்ளனர். கவி கூறுகையில்,

 ‘‘டூவீலரில் இவ்வளவு தூரம், அதுவும் இரவில் வந்தததால் உடல் சோர்வாக உள்ளது. இரவில் பஸ் வசதி ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’’ என்றார். மழையால் அவதி: தஞ்சை கரந்தட்டாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள மையம் பைபாஸ் சாலையில் உள்ளது. இங்கு இன்று காலை 8.30 மணிக்கே 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்து விட்டனர். சிறிது நேரம் லேசாக மழை தூறியதால், அவர்கள் ஒதுங்க இடமின்றி தவித்தனர். பின்னர் மழை விட்டு விட்டது.

பட்டினி கிடக்க வேண்டும்

தஞ்சை கரந்தாட்டங்குடி மையத்துக்கு தேர்வு எழுத வந்த மாணவன் மாதேஸ்வரனின் தாய் யோகலட்சுமி கூறுகையில், ‘‘11.40 மணிக்கு உள்ளே அனுப்புகின்றனர். மாலை 5 மணிக்கு தான் வெளியே வர முடியும். சாப்பாடு கிடையாது. தண்ணீர் பாட்டில் மட்டும் கொண்டு செல்லலாம் என கூறியுள்ளனர். தண்ணீர் மட்டும் பசியை போக்குமா. மாணவர்கள் பட்டினியால் வாடப்போகின்றனர். காலையில் தேர்வு வைத்திருந்தால், இந்த பிரச்னை இருந்திருக்காது’’ என்றார்.

Related Stories: