டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா மீண்டும் அனுமதி: டுவிட்டரில் #AmitShah என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்...இந்தியளவில் முதலிடம்.!!!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், #AmitShah என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷாவுக்கு (55) கடந்த மாதம் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. டெல்லி, அருகேயுள்ள ஹரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்து வீடு  திரும்பினார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உடல் நலம் பெற்ற அமித்ஷா, 13 நாட்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 7 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், மூச்சுத் திணறல் இருப்பதாக கூறியதை அடுத்து  நேற்று இரவு 11 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய அமித்ஷாவின் உடல் நிலை குறித்து தகவல்கள் எதுவும்  மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், #AmitShah என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆதரவாளர்கள் #Getwellsoonsir என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளனர்.  #Getwellsoonsir என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் பொலிடிக்கல் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியளவில் 15-வது இடத்தில் உள்ளது. இதனைபோல், #AIIMS என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Related Stories: