ரிட்டர்னுக்கு கட்டணம் வசூலிக்க முடியாது என கறார் சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிப்பதால் 30 நிமிடம் காத்திருப்பு: டிரைவர்கள் கடும் அவதி

சென்னை: தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. சுங்கச்சாவடிகளில் தினமும் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க பாஸ்டேக் ஸ்டிக்கர் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. தற்போது வரை 2.50 கோடிக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் விநியோகிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாஸ்டேக் ஸ்டிக்கர் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் சுங்கச்சாவடியை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையும் மீறி சென்றால் கூட அந்த வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை தொடர்ந்து, பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் மட்டும் செல்ல சுங்கச்சாவடிகளில் இரண்டு பக்கம் ஒரு வழிப்பாதை மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் செல்லும் வாகனங்களிடம் ஒரு முறை மட்டுமே செல்ல ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ரிட்டர்ன் வரும் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் இரண்டு பக்கமும் ஒரு பாதை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், ரொக்கமாக கட்டணம் செலுத்த 30 நிமிடங்கள் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரொக்கமாக கட்டணம் செலுத்த கூடுதல் வழிப்பாதை மற்றும் ரிட்டர்னுக்கும் சேர்த்து ரொக்கமாக பணம் வசூலிக்கப்படும் பட்சத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை தடுக்க முடியும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Related Stories: