10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுக்கு 15ம் தேதி முதல் ஹால்டிக்கெட்: செய்முறை தேர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியீடு

சென்னை:  தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கை: செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 11 மற்றும் 12ம் வகுப்புக்கான துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் ஹால்டிக்கெட்டை 15ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 26ம் தேதி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம்) மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) பாடங்களுக்கான தேர்வினை எழுத ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்களும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஏற்கனவே எழுத்து தேர்வெழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். மீண்டும் எழுத்துத் தேர்வினை எழுத வேண்டாம்.

ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுதவேண்டும். துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப்போன்று 21ம் தேதி முதல் 26ம் தேதி நடைபெறவுள்ள 10ம் வகுப்பு துணை தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்க்ம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: