சிவகளையில் இரு இடங்களில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு: தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு

ஏரல்:  தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரம்பில் ஆசிரியர் மாணிக்கம்  கண்டறிந்த தொல்லியல் களத்தில் ஆய்வு நடத்திட தமிழக  தொல்லியல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையருமான உதயச்சந்திரன் அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ரூ.59 லட்சம் ஒதுக்கீடு  செய்து முன்னோர் வாழ்ந்த பகுதியை கண்டறிய அகழாய்வு பணி நடந்து வருகிறது.இதில் சிவகளை பரும்பு பகுதியில் 23 குழிகளும், வளப்பான்பிள்ளை திரட்டில் 3 குழிகளும் தோண்டப்பட்டது. பரும்பில் மட்டும் 31 முதுமக்கள் தாழிகள்  கண்டுபிடிக்கப்பட்டன. அவை 30 செ.மீ ஆழத்திலும், 120 செ.மீ ஆழத்திலும் அதன் வாய் பகுதி 30 செ.மீ முதல் 55 செ.மீ விட்டம் வரை கிடைத்துள்ளது.  இந்த தாழிகள்  தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தன் தலைமையில் கடந்த மாதம் 17ம்தேதி திறக்கப்பட்டது. தாழிகளில் சிறிய, சிறிய கிண்ணத்தில் இருந்து நெல்மணிகள், அரிசி, மனிதனை எரித்து வைத்த சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மனித தாடை  எலும்புடன் பற்கள், முதுகு எலும்புகள் உள்ளிட்டவை இருந்துள்ளது. 45க்கும் மேற்பட்ட கிண்ணங்கள், மூடிகள், சுடுமண் தாங்கிகள், 20க்கும் மேற்பட்ட  இரும்பினால் ஆன ஆயுதங்கள் கண்டெடுத்து அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர். வளப்பான்பிள்ளை திரட்டில் நுண்கற்கால கருவிகள், தமிழ் பிராமி  எழுத்துகள், கிராபிட்டி எழுத்துகள், குறியீடுகள் மற்றும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண்ணாலான உருவங்கள்,  செப்புக்காசு, சங்கு வளையல் துண்டுகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நெல், அரிசி பொருட்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ளதாக கூறப்படுகிறது.  மீதமுள்ள முதுமக்கள் தாழியில் இருந்து கிடைத்துள்ள  தாடை எலும்பு துண்டுகள், பற்களை  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த  மனிதர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பதும் இந்த மரபணுவுடைய மனிதர்கள் தற்போது எங்கு வசிக்கின்றனர் என்பதும்  இதன்மூலம் தெரியவரும். இதனால் சிவகளை மக்களின் தொன்மையும், பழமையும் மற்றும் தாமிரபரணி ஆற்றின் பழமையும் விரைவில் தெரியவரும்  என கூறப்படுகிறது.இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் உதயச்சந்திரன் நேற்று சிவகளையில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு  நடத்தினார். தொடர்ந்து அவர் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், பாண்டிச்சேரி பல்கலைகழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜன், சிவகளை கள  அதிகாரிகள் பிரபாகரன், தங்கத்துரை, ஆதிச்சநல்லூர் கள அதிகாரி பாஸ்கரன், ஆராய்ச்சியாளர் ஆசிரியர் மாணிக்கம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி  காமராசு, சிவகளை பஞ்.தலைவர் பிரதிபா மதிவாணன், துணைத்தலைவர் கைலாசம், எழுத்தர் வெங்கடேஷ், வைகுண்டம் யூனியன் கவுன்சிலர்  ராமலட்சுமி, சிவகளை காங்கிரஸ் தலைவர் பிச்சையா, முன்னாள் கவுன்சிலர் சேகர், ஓய்வுபெற்ற டிஆர்ஓ இளங்கோ, ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல்  மேனஜர் சண்முகப்பிள்ளை, விஏஓ கார்த்திக், முன்னாள் பஞ்.தலைவர் நாராயணன், ஆசிரியர் சரவணபவா உட்பட பலர் பங்கேற்றனர். அகழாய்வு  பணியில் கிடைத்த பொருட்களை சிவகளை சுற்றுவட்டார மக்கள் வந்து பார்வையிட்டனர்.

Related Stories: