தாத்தா, பாட்டி கண்முன் பரிதாபம் தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் சிறுவன் நசுங்கி பலி: 5 பேர் படுகாயம்

சென்னை: எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (36). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் பிரனீஷ் (5), நேற்று காலை 8 மணி அளவில் தரமணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது தாத்தா, பாட்டியுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தான். பட்டினப்பாக்கம் எஸ்சிபி சிக்னல் அருகே சென்றபோது, மின்னல் வேகத்தில் பின்னால் வந்த மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் ஒப்பந்த தண்ணீர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மொபட் மீது மோதியது. இதில், மொபட் இருக்கைக்கு முன்பு நின்று கொண்டிருந்த பிரனீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனது தாத்தா, பாட்டி காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து ஓடிய தண்ணீர் லாரி, அங்குள்ள சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (32) உட்பட சாலையில் பைக்குகளில் சென்று கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். சினிமா காட்சி போல் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் படுகாயமடைந்த ரமேஷ் உட்பட 5 பேரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த சிறுவன் பிரனீஷ் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த தண்ணீர் லாரி டிரைவர் சமீர் (24) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தண்ணீர் லாரி திடீரென பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய மெட்ேரா வாட்டர் ஒப்பந்த தண்ணீர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: