வரலாற்றில் முதல்முறையாக சுவாமி மாடவீதி உலா இல்லாமல் நடக்கிறது திருப்பதி பிரமோற்சவம்: ஆன்லைன் டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டுமே அனுமதி

திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆண்டு பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத்  ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நடைபெறும் பிரமோற்சவத்தில், வரலாற்றில் முதன்முறையாக சுவாமி மாடவீதி உலா  வைபவம் இல்லாமல் நடைபெற உள்ளது. கொரோனா பரவலை தடுக்க திருப்பதியில் வழங்கிய இலவச தரிசன டிக்கெட்டுகள், கடந்த வாரம் முதல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது ஆன்லைன் மூலம் 300 டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே, பிரமோற்சவத்தில் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.வரும் 17ம் தேதி புரட்டாசி மாதம் தொடங்குவதால் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைனில் கட்டண தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருப்பதி அலிபிரி வழியாக அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாமல் வருவோர் யாராக இருந்தாலும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் அலிபிரி சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள்இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: