முதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன் முன் வாலிபர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

* தடுக்க சென்ற பெண் ஏட்டுக்கும் காயம்

வத்தலக்குண்டு :  முதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி, வத்தலக்குண்டு காவல் நிலையம் முன்பு வாலிபர் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). கூலித்தொழிலாளி. மனைவி ரேவதி. 2 குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளியூர் சென்று வேலை பார்ப்பது வழக்கம். கோபிசெட்டிபாளையத்தில் வேலை பார்க்கும்போது அங்கு ஜெயந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தன. கொரோனாவால் வேலையில்லாத நிலையில் பாலமுருகன் பூசாரிபட்டியில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயந்தி, பாலமுருகனை பார்க்க பூசாரிபட்டி வந்தார். அப்போதுதான் பாலமுருகனின் 2வது திருமண விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து ரேவதி வீட்டார் நேற்று முன்தினம் அவரை சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு அழைத்து சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த பாலமுருகன் நேற்று மது குடித்து விட்டு வத்தலக்குண்டு காவல்நிலையம் வந்தார். அங்கு தன்னுடன் மனைவி ரேவதியை சேர்த்து வைக்கும்படி கூறினார். அதற்கு போலீசார் மனுவாக எழுதி தர கூறினர். இதையடுத்து வெளியே வந்த பாலமுருகன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுக்க முயன்றார்.

இதை கண்ட ஏட்டு மஞ்சுளா உடனே சென்று அவரை தடுத்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் பாலமுருகனிடம் நைசாக பேசி கத்தியை வாங்கினார். தொடர்ந்து கழுத்திலும், கையிலும் காயமடைந்த பாலமுருகன், ஏட்டு மஞ்சுளாவை சிகிச்சைக்காக வத்தலக்குண்டு ஜிஹெச்சில் சேர்த்தனர். இதில் பாலமுருகனை மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா, ஏட்டு மஞ்சுளாவுக்கு ஆறுதல் கூறி, அவரையும், இன்ஸ்பெக்டர் பவுலோசையும் பாராட்டினார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி வாலிபர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வத்தலக்குண்டுவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: