வெடிகுண்டுகளுடன் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீவிரவாதி நடமாட்டமா?

திண்டுக்கல் :  வெடிகுண்டு விற்பதற்காக தீவிரவாதி சுற்றி திரிவதாக கடிதம் வந்ததையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலையம் முழுவதும் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் ரயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்செட் அருகே ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு கடந்த 8ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில், ‘தீபாவளி என்ற தீவிரவாதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருகிறான். அவன் வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறான். அவனை கைது செய்யுங்கள்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை படித்து பார்த்ததும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனே திண்டுக்கல் வெடிகுண்டுகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் லீமா, மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன், 8ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் உள்ள 8 நடைமேடைகள், நடைமேடை பாலம், லிப்ட்கள், குட்செட் மட்டுமின்றி சரக்கு ரயில்கள், ரயில் இன்ஜின் ஆகியவற்றிலும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அதேபோல் ரயில் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதன்பின்பே கடிதத்தில் குறிப்பிட்ட தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது. இதையடுத்து கடிதத்தை எழுதியது யார்? எந்த ஊரில் இருந்து கடிதம் வந்துள்ளது? என ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: