ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவது தொடர்பாக விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி முடிவெடுக்கும்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் அயனாவரம் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜ் மீது கொலை வழக்கு பதிய வேண்டுமா என்பது குறித்து விசாரணையின் முடிவில் சிபிசிஐடி முடிவெடுக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மறு பிரேத பரிசோதனை கோரியும் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சிபிசிஐடி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ஆய்வாளர் நடராஜின் விசாரணை அறிக்கை சினிமா கதைபோல புனையப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை. திட்டமிட்டு படுகொலையை செய்துள்ளனர். அதனால் ஆய்வாளர் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சங்கர் என்கவுன்டர் தொடர்பான வழக்கில் பிரிவுகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து விசாரணைக்கு பிறகுதான் சிபிசிஐடி முடிவெடுக்கும் என்றார்.

பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவரின் முன்னிலையில் செய்யப்படவில்லை என்பது தொடர்பாக கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளதாக வக்கீல் சங்கரசுப்பு தெரிவித்தார். ஆனால் அந்த கூடுதல் மனு நீதிபதிக்கும், சிபிசிஐடி தரப்பிற்கும் கிடைக்காததால்,  விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலும் 6 பேரிடம் விசாரணை

ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அயனாவரம் பெண் காவலர் ஜெயந்தி, ஆய்வாளர்களின் ஓட்டுனர்கள் காமேஷ், முத்துகுமார், பழனி மற்றும் சாட்சிகளான கார்த்திக் மற்றும் பசுபதி உள்ளிட்ட 6 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று காலை இவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் துணை கமிஷனர் கண்ணன் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 4 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடந்தது. சிறையில் இருக்கும் ராணி, திலீப், தினகரன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Related Stories: