சின்னசேலம்: கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென 42 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலையடிவாரத்தில் கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தாலும் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே நீரை சேமித்து வைக்கின்றனர். மேலும் அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய பாசன கால்வாய் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.