திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் உலகளவில் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளாமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதமாக மூடப்பட்டிருந்தது. மேலும், ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவும் கடந்த மாதம் நடைபெறாமல் தடைபட்டது. இந்நிலையில், கொரோனா தளர்வு காரணமாக பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டது. மேலும், இபாஸ் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டன.

இதனால், பக்தர்கள் உற்சாகமடைந்தனர். இந்த மாத ஆவணி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வேன், பைக் மூலம் வந்தனர். இதனையடுத்து, பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோயிலின் மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு பேருந்தும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு காவடி எடுக்கப்பட்டது.

பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 5 மாதங்களுக்குப்பின் திருத்தணி முருகன் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  

Related Stories: