வரும் 14-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு.!!!

சென்னை: 3 நாட்கள் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 14, 15,16-ம் தேதிகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னென்ன அலுவல்கள் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்? என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். ஆனால், பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், 3 நாட்கள் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. கூட்டத்தொடரில், தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சபாநாயகர் தனபால், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14,15,16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. 14-ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,  மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், மறைந்த கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 16-ம் தேதி துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கேள்வி நேரம் உள்ளது. சமூக இடைவெளிவிட்டு பேரவை இருக்கைகள் அமைக்கப்படும். பேரவையில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாதுகாவலர்கள், பணியாளர்கள், பத்திகையாளர்கள் என அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார்.

Related Stories: