சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது ? : சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் ஆலோசனை தொடக்கம்!!

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்ய சபாநாயகர் ப.தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும்? என்னென்ன அலுவல்கள் அந்த கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அது எந்த தேதியில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

Related Stories: