சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்குள் 5 மாதங்களுக்கு பிறகு சிறப்பு ரயில் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம்

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழகத்திற்குள் ரயில்களை இயக்க வேண்டும் என அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தெற்கு ரயில்வே 13 சிறப்பு ரயில்களை இயக்க முன்வந்தது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை, காரைக்குடி, கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வழித்தடத்தில் ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான முன்பதிவும் கடந்த 5ம் தேதி துவங்கியது. 5 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்குவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில் வழியாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி பரிசோதனை அமைப்பு மூலம் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டது.

பயண நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையம் வந்து விட வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கடைபிடித்தே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஒரு ரயிலின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன.

Related Stories: