சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று சதவீதம் எவ்வளவு?

* பரிசோதனை எண்ணிக்கை வெளியிட வேண்டும்

* அரசு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

சென்னை: சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதத்தை தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் வாரியாக பரிசோதனை எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அரசின் கணக்குபடி தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையான தொற்று அதைவிட அதிகமாகவே இருக்கும் என்கிறனர் சமூக ஆர்வலர்கள். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே கணக்கு காட்டுவதாகவும் பாசிடிவ் இருந்தாலும் மற்றவர்களை வீட்டு தனிமை என்ற பெயரில் மருத்துவ பட்டியலில் சேர்க்காமல் விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதனால் தான் ஆந்திரா, கர்நாடகாவை போல் வெளிப்படைத் தன்மை இல்லாமல் பாசிட்டிவ் எண்ணிக்கை 5,900 முதல் 5,999க்குள்ளேயே தினசரி திட்டமிட்டு காட்டப்படுகிறது. மற்றவர்களின் பாசிட்டிவ் முடிவுகளை மறுநாள் கணக்கிட்டு சேர்க்கப்படுகிறது.

அதை உறுதி செய்யும் வகையில் செப்டம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 51 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7863 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட வாரியாக பரிசோதனை விவரங்களை தமிழக அரசு 3 மாதங்களுக்கு மேல் வெளியிடாமல் உள்ளது. இதனால் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொற்று விகிதத்தை அறிய முடியவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மாவட்டம் வாரியாக பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று சதவீதத்தை குறைக்க சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா சதவீதம் தொடர்பான தகவலை அரசு வெளியிடாமல் உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை வெளியிடப்படுகிறது. இதை கொண்டு கொரோனா தொற்று சதவீதம் கணக்கிடப்படாது. இதன்படி தற்போது சென்னையில் தொற்று சதவீதம் 8 ஆக உள்ளது.

ஆனால் மற்ற மாவட்டங்களில் இது போன்று சோதனை விவரங்கள் வெளியிடப்படுவது இல்ைல. ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த எண்ணிக்கை வெளியிடப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் குறைவான சோதனை செய்து அதிக பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால் அங்கு தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். எனவே அங்கு மேலும் சோதனையை அதிகரிக்க வேண்டும். தினசரி தமிழகத்தில் 80 ஆயிரத்திற்கு  மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது. எனவே மாவட்டம்  வாரியாக சோதனை விவரங்களை தினசரி அறிக்கையில் வெளியிட வேண்டும். அவ்வாறு  வெளியிட்டால்தான் தொற்று நிலை குறித்து முழுமையாக அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: