மத்திய அரசில் பணியாற்றும் தமிழக அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தி பேசும் மக்கள் தவிர மற்ற மொழியினர் அனைவரும் மாற்றாந்தாயின் பிள்ளைகளா? மத்திய பாஜ அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது. இந்தி தெரியாத தனக்கு இந்திப் பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பம் இல்லை என்றும், இந்திப் பிரிவில் உள்ள மூன்று அதிகாரிகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால், புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த இந்திய நாட்டை, ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாஜவின் கபட நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? இந்தியாவை, ‘ஹிந்தி-யா’வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா? இந்தி பேசும் மக்கள் தவிர மற்ற மொழியினர் அனைவரும் மாற்றாந்தாயின் பிள்ளைகளா? மத்திய பாஜக அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா?. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: