கொரோனாவிலும் அரசு மருத்துவமனைகளின் விபத்துகால பிரிவில் 63,000 பேருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள விபத்து கால பிரிவில் 63 ஆயிரம் பேருக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்ட விபத்து கால சிகிச்சை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா காலத்தில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் அளித்திட அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை 1,52,118 ேபருக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 63,633 ேபருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்திக் கொண்ட 52,849 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாம்பு கடித்த 19,947 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4,432 பேருக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள், 7,775 பேருக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் 2,41,615 பேருக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: