நடிகை காயத்திரி சாய் வீட்டில் 12 சவரன் திருடிய செவிலியர் கைது: நகையை அடகு வைத்து ரூ1 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தது அம்பலம்

சென்னை: திரைப்பட நடிகை காயத்திரி சாய் வீட்டில் 12 சவரன் நகைகளை திருடிய செவிலியரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து ₹1 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தது விசாரணையில் அம்பலமானது. ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையை சேர்ந்தவர் காயத்திரி சாய். அஞ்சலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது வயதான தாயை பராமரிக்க கடந்த மாதம் தனியார் ஏஜென்சி மூலம் மயிலாப்பூர் கபாலி தோட்டத்தை சேர்ந்த செவிலியர் சிவகாமி (44) என்பவர் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், நடிகை வீட்டில் வைத்திருந்த ரூ6 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் பழங்கால தங்க நகைகள் திடீரென மாயமானது.

இதுகுறித்து நடிகை காயத்திரி சாய் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சார்லஸ், நடிகை வீட்டில் வேலை செய்து வந்த 2 வாலிபர்கள் மற்றும் செவிலியர் சிவகாமி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், செவிலியர் சிவகாமி நகையை திருடியது தெரியவந்தது. ஆனால் ஒன்றும் தெரியாததுபோல் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். திருடிய நகைகள் பழமையானவை என்பதால் அதில் இரண்டு வளையல்களை பித்தளை என நினைத்து வீட்டிலேயே வைத்துள்ளார். மீதுமுள்ள நகைகளை ரூ2.50 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளார். அதில் ரூ1 லட்சத்திற்கு சிவகாமி தனது பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்.

அவரது இரண்டு மகன்கள் பெயரில் தலா ரூ25 ஆயிரம் வங்கி சேமிப்பில் போட்டுள்ளார். மீதமிருந்த ரூ1 லட்சத்தை கடன் கொடுத்துவிட்டு வசதியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, செவிலியர் சிவகாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: