பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் விரும்பினால் முதலாம், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி

புதுடெல்லி: பல்கலைக் கழகம், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளன. அதே நேரம், இந்த மாதம் 30ம் தேதிக்குள் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி அறிவித்தது. இதை எதிர்த்து 31 மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவற்கு கடந்த மாதம் 28ம் தேதி அனுமதி அளித்தது.

இந்நிலையில், மாணவர்கள் அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா நோய் தொற்று அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் முதல் மற்றும் 2ம் ஆண்டுகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும் அல்லது வைரஸ் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முதலாம், 2ம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் நடத்த விரும்பினால் நடத்தலாம். ஆனால், அது யுஜிசி.யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதே போன்று, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,’ என தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் அமைப்புகளின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Related Stories: