தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பணிகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை செய்ய உள்ளனர். இந்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று மாலை 3 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று புதிதாக பெயர் சேர்ப்பது, நீக்குவது, பிழை திருத்துவது, போலி வாக்காளர்களை நீக்குவது போன்ற பணிகள் முழுவதுமாக முடித்து, வருகிற நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

* கன்னியாகுமரி எம்பி தொகுதி காலியானதாக அறிவிப்பு

கன்னியாகுமரி தொகுதி எம்பி எச்.வசந்தகுமார் கடந்த மாதம் 10ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 28ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி இருந்தார். இந்திய தேர்தல் ஆணையமும் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

Related Stories: