கிச்சன் டிப்ஸ்...

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கொள்ளுப் பருப்பை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து, வார்க்கும்போது உப்புப் போட்டு இட்லி செய்தால் நன்றாக இருப்பதுடன் உடலில்  கொழுப்புச் சத்தும் சேராது.

- ஆர்.பார்வதி, சென்னை-80.

தேங்காய் சட்னி அரைக்கும்பொழுது பச்சைமிளகாயையும், பொட்டுக்கடலையையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி விட்டு அரைத்தால் நீண்டநேரம்  வரை சட்னி கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும் அரைக்கும்போது தண்ணீர் நிறைய விடக்கூடாது. சமோசா என்றாலே உருளை, கேரட், பட்டாணி  இத்யாதிதானா? பொடிப் பொடியாய் நறுக்கிய வெள்ளரிக்காய், சமபங்கு வெங்காயம், இஞ்சித்துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து  பாதி வேக்காடு எடுத்து சமோசா செய்து பாருங்களேன் சுவையாக இருக்கும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

இறைச்சி வேகவைக்கும் போது சிறிது கடுகுப்பொடியைப் போட்டால் இறைச்சி மிகவும் மிருதுவாக இருக்கும்.

- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

கேக்கில் முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடரோடு 1 டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம். முட்டை  சேர்ப்பதால் உண்டாகும் அதே மிருதுத்தன்மை கிடைக்கும். ஜவ்வரிசி, அரிசிக்கூழ் போன்றவற்றில் வடாம் செய்யும்போது அதில் சிறிது கசகசாவையும்  ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டால் வற்றல் நன்றாகப் பொரியும், மணமும் ருசியும் கூடும்.

- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

உடைத்த தேங்காயை உப்புக் கலந்த நீரில் கழுவி வைத்தால் நிறமும், சுவையும் மாறாமல் சில நாட்கள் இருக்கும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்.

ஜாம் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க வேண்டும். நன்றாக விளைந்த காய்களின் பழங்களே சிறந்தது. நன்றாகப் பழுத்த  பழங்களை பயன்படுத்தாமல் இருந்தாலும், பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமல் ஜாம் தயாரித்தாலும் ஜாம் புளிப்புத்தன்மையாகி விடும்.

- ஆர்.அஜிதா, கம்பம்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கால் கப் பால் ஊற்றி பிசைந்தால், ஒரு துளி கூட எண்ணெய் விடாமலேயே புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி  செய்யலாம்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

கீரையை ஆவியில் வேகவைத்து எடுத்து தயிரில் கலக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை வதக்கி போட்டு  தயிர் பச்சடி செய்யலாம். இதனை சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

கடலை எண்ணெயில் சிறிது புளியைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

வெயில் காலங்களில் முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை கெடாமலிருக்கும்.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

Related Stories: