காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை இ-சஞ்சீவனி ஓபிடி திட்டத்தில் காசநோய், இயற்கை மருத்துவ சேவைகள் சேர்ப்பு: தமிழில் ஆலோசனை பெறலாம்

சென்னை: காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் இ - சஞ்சீவனி ஓபிடி திட்டத்தின் கீழ் காசநோய் மற்றும் இயற்கை மருத்துவ சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் மத்திய அரசு இ - சஞ்சீவனி ஓபிடி என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடி மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். இதன்படி பொதுமக்கள் www.esanjeevaniopd.in என்ற இணையதளத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய கடவு எண் மூலம் பயன்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து மருத்துவரை சந்திப்பதற்கான டோக்கன் எண் வழங்கப்படும். இதைக் கொண்டு இணையதளத்தில் மருத்துவரை சந்திப்பதற்கான பிரிவில் நுழைய வேண்டும். இதன்பிறகு திரையில் call now என்ற வரும்போது அதை அழுத்தினால் மருத்துவர் காணொளி காட்சி மூலம் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். இதன்பிறகு மருத்துவர் மருந்துகளை பரிந்துரை செய்வார். இந்த மருந்து சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அருகில் மருந்தகங்களில் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தில் புதிதாக காசநோய் மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி பொது மருத்துவ நோயாளிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலோசனை பெறலாம். எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆலோசனை பெறலாம். காசநோய் பாதித்தவர்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆலோசனை பெறலாம். இயற்கை மருத்துவம் தொடர்பான சேவைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் பெறலாம். தற்போது 700க்கு மேற்பட்ட மருத்துவர்கள் தமிழ் மொழியில் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Related Stories: