வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் தனியார் ஏஜென்ட்டை போல் செயல்படுகிறது ரிசர்வ் வங்கி: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: ‘வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு ஒரு தனிப்பட்ட ஏஜென்ட் போன்று உள்ளது, ’ என உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் வங்களில் செலுத்தப்பட வேண்டிய கடன்களுக்கு தவணையை கட்டுவதற்காக 2 கட்டமாக ரிசர்வ் வங்கி, 6 மாதம் காலஅவகாசம் வழங்கியது. இருப்பினும், கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், வங்கி கடன் தவணையை செலுத்த தரப்படும் சலுகையை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை பதிலாக அளிக்கும்படி தெரிவித்திருந்தது. இதையடுத்து, வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கூட அவகாசம் வழங்க முடியும் என மத்திய அரசு, ரிசர்வ் வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று நேரத்தில் வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து வட்டிக்கு வட்டி வாங்கும் ரிசர்வ் வங்கியின் செயல் சட்டத்திற்கு புறம்பானது. பொதுமுடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் இவ்வாறு நிர்பந்திக்கக் கூடாது. நரகத்தனமான வாழ்வாதாரம் இருக்கும் தற்போதைய சூழலில் மக்களுக்கான தவணையை  தள்ளுபடி செய்தால் அவர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள். அதை விடுத்து, வாங்கிய கடனுக்காக வட்டிக்கு வட்டி வசூலிப்பது என்பது வேதனையாக உள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட  குடிமக்களுக்கு அரசே பண உதவியை செய்து வருகிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக இங்கே வங்கி கடன் வாங்கியவர்களுக்கு வட்டிக்கு வட்டி என்ற அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து வருவது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. மேலும், வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு சுற்றறிக்கையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த கடன் வசூல் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஒரு தனிப்பட்ட ஏஜென்ட் போன்று செயல்பட்டு வருகிறது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பேரிடர் சட்டவிதி தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதன்படி ஒரு சதவீதம் கூட செயல்பாட்டில் இல்லை. மேலும், வட்டிக்கு வட்டி வசூல் செய்வது, மக்களிடத்தில் ஒரு வெற்றிடத்தை மட்டுமே ஏற்படுத்தும்.இவ்வாறு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் தரப்பு வாதங்களை, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா முன்வைக்க உள்ளார்.

* பெரிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வது எப்படி?

மனுதாரர்கள் தரப்பில் செய்யப்பட்ட வாதத்தில், ‘பலர் அதிகளவில் வாங்கிய கடன்களையே தள்ளுபடி செய்த ரிசர்வ் வங்கி, வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் முடியாது என திட்டவட்டமாக கூறுகிறது. இதுபோன்ற சூழலில்தான் மத்திய அரசு மக்களுக்கு உதவு வேண்டும். ஆனால், அவர்கள் அதனை செய்ய தவறி விட்டார்கள். ரிசர்வ் வங்கியின் இந்த செயல்பாடு மனிதநேயத்தை காணாமல் போக செய்து விட்டது,’ என்றும் கூறப்பட்டது.

Related Stories: